அண்மையில் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணை விடுதலையான சமூக செயற்பாட்டாளர் திரு. ருஸ்தி மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை, சட்டவிரோதமானது எனவும் அதற்காக அவருக்கு அரசாங்கம் ரூ.2 இலட்சம் இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.
இது மாதிரியான நடவடிக்கைகள், நாட்டில் பேசும் சுதந்திரம், ஊடகவியலாளர் உரிமைகள் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளுக்கு நேரடியானதொரு அச்சுறுத்தலாகும். தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்படுவது, ஜனநாயகமுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.
ஐக்கிய காங்கிரஸ் இந்த கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றது.
இது போன்ற நடவடிக்கைகள் நாட்டில் ஒரு வேடிக்கையான அரசாட்சி நிலவுவதை சுட்டிக்காட்டுகின்றன. நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ருஷ்டியின் கைது சட்டவிரோதமானது என அறிக்கை வெளியிட்டு இத்தீர்ப்பை உறுதிப்படுத்தியதின் வழியாக, உண்மையும் நேர்மையும் வெற்றிபெற்றுள்ளன என்பதை பறைசாற்றுகிறது.
நீதி வழங்கப்பட்டதற்காக நாம் மகிழ்வடைகிறோம். இருப்பினும், இந்த துன்புறுத்தலுக்குப் பிறகே ஒரு நபருக்கு இழப்பீடு வழங்கப்படுவது போதுமானது அல்ல.
ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், அரசாங்கம் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்தில் செய்யமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்.
நாங்கள் கேட்கிறோம்:
எதிர்காலத்தில் எவரும் இதுபோன்று சட்டவிரோதமாக கைது செய்யப்பட வேண்டாம்.
பொது சேவையில் உள்ள அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
மனித உரிமைகளுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிராக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– சப்வான் சல்மான்
செயலாளர்,
ஐக்கிய காங்கிரஸ்.
Post a Comment