தேர்தல், திணைக்களத்தினால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை புத்தளம் உளுக்காப்பள்ளம் பகுதியில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மௌலவி ஸப்வான் சல்மானின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி ஸப்வான் சல்மான் கருத்து தெரிவிக்கையில்,
நீண்ட நிலப்பரப்பைக் கொண்ட கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.
எனவே, கற்பிட்டி பிரதேச சபையை நகர சபையாக மாற்றி கற்பிட்டி பிரதேச சபையின் உப அலுவலகமாக இயங்கி வரும் கடையாமோட்டை (அக்கரைப்பத்து) உப அலுவலகத்தை தனி பிரதேச சபையாக மாற்ற நடமவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எமது கட்சி கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகளை நிர்ணயம் செய்கின்ற கூட்டத்தில் தெளிவுபடுத்தினோம்.
இது சம்பந்தமான இதற்கு முன்னர் பல தரப்பினாலும் பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும், எல்லைகளை நிர்ணயம் செய்கின்ற கூட்டத்தில் இதுபற்றி சொல்லப்படாமல் இருந்தமையால் இதற்கு எமது கட்சி முக்கியத்துவம் வழங்கி அந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியது.
இதேவேளை, வட்டார முறைப்படி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல், பழைய முறைப்படி தேர்தலை நடத்தினால், உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற ஆலோசனையையும் முன்வைத்தோம்.
ஆனால், வட்டார முறைப்படி தேர்தலை நடத்தினால் தற்போது உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் மேலும் கூடுதலான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் . இது தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை விடவும் மேலும் நெருக்கடியை கொடுக்கும் என்பது பற்றியும் சுட்டிக்காட்டினோம்.
அதுமாத்திரமின்றி, புத்தளம் பிரதேச சபை என்பது புத்தளத்தின் நகரை அண்டிய சில பகுதிகளை உள்ளடக்கி இயக்கப்படுகிறது. புத்தளம் நகரைத் தாண்டி சில பகுதிகள் புத்தளம் பிரதேச சபையுடன் இருக்கிறது.
எனவே, புத்தளம் நகர சபை தற்பொழுது மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதால் புத்தளம் பிரதேச சபையுடன் இருக்கும் சில பகுதிகளை புத்தளம் மாநகர சபையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.
Post a Comment